கிணற்றில் போட்ட காசு
ஒருமுறை எங்கள் உறவினர்களுடன் பக்தி சுற்றுலா சென்றிருந்தோம்.அப்போது ஒரு கோவிலில் இருந்த கிணற்றில் சிலர் காசு போட்டுக் கொண்டிருந்தனர். நாங்கள் என்ன என்று கேட்டதற்கு மனதில் ஏதாவது விருப்பத்தை நினைத்து கொண்டு அதில் காசு போடவேண்டும் என்றும் , அப்படி போட்ட காசு நீரில் மூழ்காமல் கிணற்று திட்டில் நின்றுவிட்டால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்றும் சொன்னார்கள்.ஆசை யாரைவிட்டது.எனவே நாங்களும் ஒவ்வொருவராக முயற்சி செய்தோம்.ஒன்றும் பலனில்லை.கடைசியாக எனது மதினி காசு போட்டார். அந்த காசு சரியாக திட்டில் நின்றுவிட்டது. எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அப்பாடா ஒருவரது ஆசையாவது நிறைவேறப்போகிறது என்று.உடனே அனைவரும் "நீ மனதில் என்ன நினைத்து காசு போட்டாய்" என்று அவரை கேட்டார்கள். அவர் ரொம்ப நிதானமாக சொன்னார்."கடவுளே எப்படியாவது இந்த காசை திட்டில் நிற்கசெய்" என்று வேண்டிக்கொண்டேன்.
Comments