நான் வாக்கிங் போறேன் ! நான் வாக்கிங் போறேன்
" ஆளபாரு! தொந்தியும் தொப்பையுமா! வயித்து சைஸ குறைங்க!" - இது என் சகதர்மினி அடிக்கடி என்னை பார்த்து உதிர்க்கும் நல்வார்த்தை(?) இது போதாதென்று குதிகால் வலி தாங்க முடியவில்லையென்று எலும்புசிகிச்சை நிபுணரை சென்று பார்த்தேன்.அவர் காலை இங்கும் அங்கும் அமுக்கி பார்த்துவிட்டு(எனக்கு மார்க்கெட்டில் தக்காளி வாங்கும் ஞாபகம் வந்தது), "சார்! இந்த மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க! நல்லா கேட்கும், ஆனா மாத்திரை சாப்பிடறது நிறுத்தன உடனே வலி வந்திடும்" என்றார்.இது என்ன கொடுமை என்று நான் கேட்க ,"ஆமா சார் ! நீங்க கொஞ்சம் ஓவர் வெயிட், அத குறைங்க, வலி சுத்தமா நின்னுடும்" என்று திருவாய்மலர்ந்து அருளினார். சரி, இனி கொஞ்சம் உணவு கட்டுப்பாடு அவசியம் என்று வழக்கமாய் மாலைநேரங்களில் அலுவலகத்துக்கு வெளியே கடையில் பஜ்ஜி போண்டா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெறும் இஞ்சி டீ மட்டும் குடிக்க ஆரம்பித்தேன்.சில நேரங்களில் டீயில் இஞ்சி ஜாஸ்தி ஆகி , அதை குடிக்கும...