லியோடால்ஷ்டாய் கதை ஒன்று

சமீபத்தில் லியோடால்ஷ்டாய் கதை ஒன்று படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.அந்த கதையானது:

காலணி செய்யும் தொழிலாளி சைமனை அவனுக்கு வரவேண்டிய பாக்கி தொகைகளை வசூலித்து வருமாறு சொல்லி அவன் மனைவி அனுப்புகிறாள்.சைமனுக்கென்று நிலமோ, வேறு சொத்துகளோ இல்லை.அவன் கடுமையாக உழைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்துகிறான். வழிச்செலவுக்கு என்று சிறிது தொகையை கொடுத்து , அதை பார்த்து செலவு செய்யுமாறும் , வழியில் குடித்து விடாமல் இருக்குமாறும் சொல்லி அனுப்புகிறாள்.அவனும் புறப்பட்டு செல்கிறான்.அவன் வசூலுக்காக இருவேறு கிராமங்களுக்கு செல்கிறான்.அவனுக்கு பணம் தரவேண்டிய இரண்டு வீட்டிலும் பிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.அதே சமயம் ஒருவீட்டில் சில செருப்புகளை அவனிடம் தந்து தைத்து தரச் சொல்கிறார்கள்.அவனும் தைத்து தருகிறான்.அதற்காக அவனுக்கு கொஞ்சம் பணம் தருகிறார்கள்.அவன் அதை வாங்கிக்கொண்டு ஊர் திரும்புகிறான்.வழியில் பயங்கர குளிர் ஆக இருக்கிறது.சிறிது வோட்கா குடித்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றுகிறது.ஆனால் அவன் மனைவி திட்டுவாளே என்று யோசிக்கிறான்.பிறகு அவள் கொடுத்த பணத்தில் குடிப்பது இல்லைஎன்றும், செருப்பு தைத்ததற்காக கிடைத்த பணத்தை கொண்டு குடிக்கலாம் என்று நினைத்து அதன்படி செய்கிறான்.அவன் ஊரை நெருங்கும்போது மாதா கோயிலருகில் குளிரில் நடுங்கியபடி ஒரு மனிதன் ஆடையில்லாமல் நிற்பதை பார்த்து, அவன்மேல் இரக்கப்பட்டு தன்னுடைய கம்பளியை அவனுக்கு போர்த்தி அவனை தன்னோடு அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போகிறான்.அவன் குடித்துவிட்டு வந்திருப்பதை பார்த்து அவன் மனைவி கத்துகிறாள்.அவன் உடனே நடந்ததை சொல்லி அவள் கொடுத்த பணத்தை அவளிடம் கொடுக்கிறான்.பிறகு அவள் உடன்வந்துள்ள புதியவன் யார் எனக் கேட்கிறாள்.அவனை தான் சந்தித்த சூழ் நிலையை சொல்லி தங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது தரச்சொல்கிறான்.அதைகேட்டு கோபப்பட்டு சத்தம் போடும் அவளை கடவுளின் பெயரால் அமைதியாக இருக்குமாறு சிமொன் கேட்கிறான்.அவள் சமாதானமாகி இருவருக்கும் உண்ணக் கொடுக்கிறாள்.அந்த புது மனிதன் தன்னுடைய பெயர் மைக்கேல் என்று சொல்கிறான்.சாப்பிடும்போது மைக்கேல் புன்னகை புரிகிறான்.பிறகு அவனை சிமொன் தன்னுடனேயே தங்க வைத்துக்கொள்கிறான்.மைக்கேலுக்கு காலனி தைப்பதை சிமொன் கற்றுத்தருகிறான்.

மைக்கேல் வந்த பிறகு சிமொனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தெரிகிறது.மைக்கேல் செய்யும் காலனிகள் நேர்த்தியாக இருந்ததால் சிமொனுடைய கடையை தேடி நிறைய பேர் வர ஆரம்பிக்கிறார்கள்.அதனால் சிமொனுடைய வருமானமும், வாழ்க்கைத்தரமும் உயர்கின்றன.ஒருவருடம் கழித்து ஒரு நாள் செல்வந்தர் ஒருவர் ஷூ தைக்க சிமொன் கடைக்கு வருகிறார்.அவனிடம் ஷூ தைப்பதற்கான் தோலைகொடுத்து அது இறக்குமதி செய்யப்பட்ட தோல் என்றும் அதனால் கவனமாக தைத்து தருமாறும் சொல்கிறார்.சிமொன் தைத்து தரும் ஷூ ஒரு வருடத்திற்கு கிழிந்து,வடிவமிழந்து போகக் கூடாது என்றும், அப்படி அது உழைத்தால் அவனுக்கு சன்மானமாக 10 ரூபிள் தருவதாகவும், அப்படி அது உழைக்கவில்லையென்றால் அவனை சிறையில் அடைத்துவிடுவதாகவும் சொல்கிறார்.சிமொன் இதைக்கேட்டு பயப்படுகிறான்.மைக்கேல் அவனுக்கு நம்பிக்கையூட்டி அந்த வேலையை ஒப்புக்கொள்ள செய்கிறான்.மைக்கேலை பார்க்கும் அந்த செல்வந்தர் அவன் யாரென்று கேட்கிறார்.அவன் தன்னுடைய பணியாள் என்றும்,அவன் தான் ஷூ தைக்க போகிறவன் என்றும் சிமொன் சொல்ல, செல்வந்தர் மைக்கேல்லிடம் "ஜாக்கிரதை, பார்த்து தை" என்று சொல்கிறார்.மைக்கேல் அதைக்கேட்டு புன்னகை புரிகிறான்.பிறகு செல்வந்தர் அங்கிருந்து போனபிறகு மைக்கேலிடம் ஷூ தைக்குமாறு சொல்லிவிட்டு செல்கிறான் சிமொன்.மைக்கேலும் அந்த தோலைஎடுத்து வெட்ட தொடங்குகிறான்.இதை சிமொனின் மனைவி மாட்ரியோனா பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.ஆனால் மைக்கேல் ஷூ தைப்பதற்கான அளவில் அதை வெட்டாமல் செருப்பு தைக்கும் அளவில் அதை வெட்டுகிறான்.இதைப் பார்க்கும் அவளுக்கு குழப்பமாக இருக்கிறது.எனினும் மைக்கேலுக்கு தெரியாதது ஒன்றும் இருக்காது, அவன் எதையும் சரியாக செய்வான் என்று அங்கிருந்து கிளம்புகிறாள்.ஆனால் இது அறிந்த சிமொன் மைக்கேலை அவன் அப்படி செய்ததற்காக கடிந்துகொள்கிறான்.அப்போது வெளியே வண்டி ஓசை கேட்கிறது.செல்வந்தரின் பணியாள் ஒருவன் அதிலிருந்து இறங்கி சிமொனின் வீட்டிற்கு வருகிறான்.அவன் சிமொனிடம் தனது எஜமானி அவனை அனுப்பியதாகவும், செல்வந்தர் சொன்னவாறு ஷூ செய்ய வேண்டாம் என்றும் சொல்கிறான்.சிமொன் அதற்கான காரணம் கேட்கும்போது அந்த பணியாள் வீட்டிற்கு திரும்பும் வழியில் செல்வந்தர் இறந்துவிட்டதாகவும், அதனால் எஜமானி ஷூவிற்கு பதில் சவத்திற்கு அணிவிக்கும் செருப்பு செய்யச் சொல்லி அவனை அனுப்பியதாக சொல்கிறான்.இதைக்கேட்ட சிமொன் ஆச்சரியப்படுகிறான்.மைக்கேல் உடனே உள்ளே சென்று தான் செய்துவைத்திருந்த செருப்பை கொண்டு வந்து தருகிறான்.பணியாள் அதை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்புகிறான்.

வருடங்கள் உருண்டோடுகின்றன.மைக்கேல் சிமொன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன.இந்த ஆறு வருடத்தில் அவன் அதிகம் பேசுவதில்லை.அளவாகவே பேசுவான்.அது மட்டுமில்லாமல் இந்த ஆறு வருடத்தில் அவன் இரண்டுமுறை மட்டுமே புன்னகை செய்திருக்கிறான்.மாட்ரியோனா அவனுக்கு முதலில் உணவிட்ட போதும், அந்த செல்வந்தர் சிமொனின் வீட்டிற்கு வந்த போதும்.ஒரு நாள் அனைவரும் வீட்டில் இருக்கையில் சிமொனின் குழந்தைகள் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.அப்போது தெருவில் ஒரு பெண் இரண்டு சிறுமிகளுடன் நடந்து வருவதை பார்த்து அதை மைக்கேலிடம் சொல்கிறார்கள்.அதில் ஒரு சிறுமி சற்று காலை இழுத்து நடக்கிறாள்.அந்த பெண் சிமொனின் வீட்டிற்குள் நுழைகிறாள்.சிறுமிகள் இருவருக்கும் வசந்த காலத்தில் அணிந்து கொள்ளும் ஷூ செய்து தருமாறு கேட்கிறாள்.அதற்கு சிமொன் , தன் வாழ் நாளில் அவ்வளவு சிறிய ஷூக்களை செய்ததில்லை, ஆனால் தங்களால் அதை செய்து தரமுடியும் என்று சொல்லி மைக்கேலை பார்க்கிறான்.மைக்கேலோ அந்த சிறுமிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.அதைப்பார்க்கும் சிமொனுக்கு ஒன்றும் புரியவில்லை.அந்த பெண் கால் ஊனமான சிறுமியை தனது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, அவளுடைய இரண்டு கால் அளவுகளையும் எடுத்து, நன்றாக உள்ள காலின் அளவில் மூன்று ஷூக்களும், ஊனமான காலின் அளவில் ஒரு ஷூவும் செய்ய சொல்கிறாள்.காரணம் கேட்கும் போது அந்த சிறுமிகள் இரட்டையர்கள் என்கிறாள்.அந்த சிறுமியின் கால் எதனால் அப்படி ஆனது, பிறக்கும் போதே அப்படிதான் இருந்ததா என்று சிமொன் கேட்கிறான்.அதற்கு அந்த பெண், அந்த சிறுமியின் தாயார் அவளின் காலை நசுக்கிவிட்டதாக சொல்கிறாள்.உடனே மாட்ரியோனா " அப்படி என்றால் நீங்கள் இந்த சிறுமிகளின் தாய் இல்லையா?" என்று கேட்கிறாள்.தான் அவர்களின் தாய் இல்லையென்றும் , ஆனால் அவள் தான் அந்த சிறுமிகளுக்கு பாலூட்டி வளர்த்ததாகவும், அது ஒரு பெரிய கதை என்றும் சொல்கிறாள் அந்த பெண்.

அதைப் பற்றி அவள் சொன்னது: "ஆறு வருடங்களுக்கு முன்பு இது நடந்தது.இந்த சிறுமிகளின் தந்தை ஒரு மரம்வெட்டி.ஒரு நாள் வெட்டிய மரம் அவன் மேலே விழுந்து அவன் இறந்துவிட்டான்.அவன் இறந்த அதேவாரம் அவன் மனைவி இந்த இரட்டையர்களை பெற்றாள்.ஒரு நாள் காலை நான் அவளை பார்க்க சென்றபோது அவள் குளிரில் நடுங்கி இறந்துவிட்டிருந்தாள்.அப்படி இறக்கும்போது அவள் உருண்டு தனது குழந்தையின் காலை நசுக்கிவிட்டாள்.அதன் பிறகு நான் தான் இந்த குழந்தைகளை என் குழந்தைகளாக வளர்த்து வருகிறேன்." கதையை கேட்டு முடித்த மாட்ரியோனா உடனே "தாய், தந்தை இல்லாமல் ஒருவர் வாழ்ந்துவிடலாம்.ஆனால் கடவுள் இல்லாமல் ஒருவரால் வாழ முடியாது" என்று ஒரு பழமொழி சொல்கிறாள்.அப்போது மைக்கேலை பார்க்கும் சிமொன் அவன் புன்னகை புரிவதைக் காண்கிறான்.

அந்த பெண் அங்கிருந்து சென்றவுடன் மைக்கேல் தனது இருக்கையிலிருந்து எழுந்து "கடவுள் என்னை மன்னித்துவிட்டார். நான் ஏதாவது தவறாக நடந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் விடைபெறுகிறேன்" என்றான்.மைக்கேலை சுற்றி ஒரு ஒளி பரவுவதை பார்க்கும் சிமொன் அவன் முன்பு மண்டியிடுகிறான்.பிறகு, "மைக்கேல் நீ சாதாரண மனிதன் அல்ல என்பது எனக்கு தெரியும்.உன்னுடைய முகம் மிகவும் பிரகாசிக்கிறது.எனது மனைவி உனக்கு முதன்முறை உணவளித்தபோது ஒருமுறையும், அந்த செல்வந்தர் நமது வீட்டிற்கு வந்தபோது இரண்டாம் முறையும், இன்று அந்த பெண் தனது கதையை சொன்னபோது மூன்றாம்முறையும் நீ புன்னகைத்தாய்.அதற்கான காரணம் என்ன என்பதை எனக்கு சொல்" என்கிறான். அதற்கு மைக்கேல்,"கடவுள் என்னை மன்னித்து விட்டார்.அதனால் எனது முகம் பிரகாசிக்கிறது.மேலும் கடவுள் மூன்று உண்மைகளை அறிந்துவருமாறு என்னை அனுப்பிவைத்தார்.உனது மனைவி எனக்கு இரக்கத்துடன் உணவளித்தபோது முதல் உண்மையையும்,அந்த செல்வந்தர் ஷூ தைக்க வந்தபோது இரண்டாம் உண்மையையும்,இந்த சிறுமிகளை பார்த்தவுடன் மூன்றாம் உண்மையையும் அறிந்தேன்" என்றான். சிமொன் அவனிடம்," நீ ஏன் தண்டனைக்கு உள்ளானாய்? அந்த மூன்று உண்மைகள் என்ன?" என்று கேட்டான். மைக்கேல் அதற்கு சொன்னான்: " நான் சொர்க்கத்தில் வாழ்ந்துவந்த ஒரு தேவதை. நான் கடவுளின் ஆணையை மீறியதால் தண்டனைக்கு உள்ளானேன்.ஒரு நாள் கடவுள் என்னை அழைத்து பூமியில் உள்ள ஒரு பெண்ணின் ஆத்மாவை கொண்டு வரச் சொன்னார்.அதன்படி நான் பூமிக்கு வந்தேன்.அந்த பெண் மிகவும் சீக்காக அப்போதுதான் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் இருந்தாள்.என்னை பார்த்த அவள் ," தேவதையே! ஏற்கனவே இந்த குழந்தைகள் தங்களது தந்தையை இழந்துவிட்டன.இப்பொழுது நானும் இறந்துவிட்டால் இவை அனாதை ஆகிவிடும்.தாய், தந்தை இல்லாமல் குழந்தைகளால் வாழ முடியாது.அதனால் இவை பெரியவர்களாகும் வரை என்னை அழைக்காதிரு" என்று கண்ணீர் சிந்தினாள். நான் அதற்கு மனமிரங்கி அவளை தொல்லைசெய்யாது வானம் திரும்பினேன்.கடவுள் நான் தனியே வந்ததைப்பார்த்து காரணம் கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன்.உடனே கடவுள் என்னை பூமிக்கு சென்று அந்த பெண்ணின் ஆத்மாவை கொண்டு வருமாறும், கூடவே மனிதர்களுக்குள் என்ன வாழ்கிறது? எது மனிதனுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? பெற்றோர் இல்லாத குழந்தைகள் எதனால் வாழ்கிறார்கள்? என்ற மூன்று உண்மைகளையும் அறிந்துவருமாறு சொன்னார். நான் அதன்படியே மீண்டும் பூமிக்கு வந்து அந்த பெண்ணின் ஆத்மாவை எடுத்தபோது அவள் ஒரு குழந்தையின் மேல் புரண்டு விழுந்தாள்.பிறகு அவளது ஆத்மா வானம் சென்றது. நான் சிறகுகள் இழந்து பூமியில் விழுந்தேன்.

அன்றுதான் நீ(சிமொன்) என்னைப் பார்த்தாய்.என்மீது இரக்கம் கொண்டு கம்பளி தந்தாய்.வீட்டிற்கும் அழைத்து வந்தாய்.உனது மனைவி முதலில் கடும் வார்த்தைகளை சொன்னாலும், நீ கடவுளின் பெயரை சொன்னதும் அவள் சாந்தமானாள்.பிறகு அவள் எனக்கு உணவளிக்கும் போது அவளுக்குள் அன்பு இருப்பதை பார்த்தேன்.எனக்கு கடவுளின் முதல் கேள்வியான மனிதர்களுக்குள் என்ன வாழ்கிறது என்பதற்கு பதில் கிடைத்தது. நான் மனிதர்களுக்குள் அன்பு வாழ்வதை அறிந்து கொண்டேன்.அதனால் நான் அன்று புன்னகை புரிந்தேன்.

பிறகு நான் உங்களுடன் சேர்ந்து வசிக்கத் தொடங்கினேன்.ஒரு வருடம் கழித்து அந்த செல்வந்தர் நம் வீட்டிற்கு வந்தார்.தனக்கு ஒரு வருடத்திற்கு கிழியாத ஷூ கேட்டார்.ஆனால் அவர் பின்னால் எனது சகோதர தேவதை நின்று கொண்டிருந்தது.அந்த மனிதர் அன்று மாலை இறக்கப் போவது எனக்கு தெரிந்தது. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாமல் மனிதன் அடுத்த வருடத்திற்கு திட்டம் போடுகிறான்.எனக்கு உடனே கடவுளின் இரண்டாவது கேள்விக்கு பதில் கிடைத்தது.எது மனிதனுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது? அடுத்த கணம் என்ன நிகழும் என்பது மனிதர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அதனால் நான் அன்று புன்னகை புரிந்தேன்.

இன்று அந்த பெண்மணி சிறுமிகள் இருவரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தாள்.அவர்கள் தனது பிள்ளைகள் இல்லையென்றாலும் அவள் அவர்கள் மீது அன்பை பொழிந்தாள்.அவர்களுடைய உண்மைத் தாய் என்னிடம் தாய்,தந்தை இல்லாமல் குழந்தைகளால் வாழ முடியாது என்றபோது நான் அதை நம்பினேன்.ஆனால் இன்று தாய்,தந்தை இல்லாத அந்த குழந்தைகள் வேறொரு பெண்ணால் பாசத்தோடு வளர்க்கப்படுவதைக் கண்டேன்.அந்த பெண்ணுக்குள் கடவுள் இருப்பதையும் பார்த்தேன்.எனக்கு கடவுளின் மூன்றாவது கேள்விக்கும் விடை கிடைத்தது.பெற்றோர் இல்லாத குழந்தைகள் கடவுளின் அன்பால் வாழ்கிறார்கள்.அதனால் நான் இன்று புன்னகை புரிந்தேன்.இன்று நான் கடவுளால் மன்னிக்கப்பட்டேன்." இவ்வாறு சொன்ன மைக்கேல் வானம் நோக்கி சென்றான்.

இவ்வளவுகாலம் தங்களுடன் வாழ்ந்தது ஒரு தேவதை என்பதை அறிந்த சிமொனும், அவன் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Comments

இந்த இதமான கதையைப் படித்திருக்கிறேன் சித்தன். இதை பதிவாக இட்டு நினைவு கூறவைத்தமைக்கு நன்றி
siddhan said…
தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி மாதங்கி!!!
ROSAVASANTH said…
கதைக்கு நன்றி.


//காலனி செய்யும் தொழிலாளி..//


colony ஆங்கில வார்த்தை; தமிழ் வார்த்தை `காலணி'.
siddhan said…
தங்கள் வருகைக்கும், பிழைதிருத்தலுக்கும் நன்றி வசந்த்!!!
hello,

can i use this post in parentsclups ?
siddhan said…
Hi Jeeves,
Are you asking this particular post(Tolstoy story)? And may i know what is parentsclups? Is it a site?
Siddha

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்