பறவைக் காய்ச்சலும், கேக்கும்

பறவைக் காய்ச்சல் மே.வங்கத்தில் வந்து ஒரு கலக்கு கலக்கிய போது இங்கே தமிழ்நாட்டிலும் கோழி விற்பனை சரிந்தது. என் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் தொந்தியும், தொப்பையுமாய் இருப்பார். திடீரென்று அவர் தொந்தி குறைந்து காணப்பட்டது. "என்ன ஆயிற்று, உடற்பயிற்சி ஏதாவது செய்கிறீர்களா? " என்று கேட்டேன். அவர் உடனே "அடப் போங்க! பறவை காய்ச்சல் பயத்தால் வீட்டில் சிக்கன் சமைக்க மாட்டேங்கறாங்க. எனக்கும் வெளிய சாப்பிட பயமாயிருக்கு" என்றார்."பரவாயில்லை, இப்படியாவது தொந்தி குறைந்ததே" என்று சொன்னேன். நண்பர் மிகவும் வேடிக்கையான மனிதர். "வாரத்திற்கு ஏழு நாட்கள் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவேன்.மீதி நாட்கள் சாப்பிட மாட்டேன்" என்பார். அப்படிப்பட்ட மனிதர் அசைவம் சாப்பிடாமல் இருந்தது ஒரு சாதனை தான். மக்கள் முட்டை சாப்பிடுவதை கூட தவிர்த்தனர். நான் ஒரு எஜிடேரியன்(சைவம், ஆனால் முட்டை மட்டும் சாப்பிடுவேன்). நானும் முட்டை சாப்பிடாமல் இருந்தேன். இடையில் ஒருநாள் எனது மச்சான் வீட்டிற்கு சென்றபோது கேக் வாங்கிப் போயிருந்தேன். அன்று எனது அக்காள் மகனும் அங்கு வந்திருந்தான். வாங்கிப் போயிருந்த கேக்கை எனது அத்தை எங்கள் இருவருக்கும் தட்டில் வைத்து கொடுத்தார். எனது அக்காள் மகன் கேக்கை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான். நானோ கேக்கை எடுத்து மொச்மொச் என்று தின்று கொண்டிருந்தேன். நான் முழுக்க சாப்பிட பிறகும் அவன் கேக்கை தொடவில்லை. "ஏன்டா! உனக்கு கேக் பிடிக்காதா? " என்று கேட்டேன். அவன் ரொம்ப நிதானமாக, "அப்படி இல்ல மாமா! கேக்ல முட்ட சேப்பாங்க, அதான் நான் சாப்பிடல. பறவை காய்ச்சல் பீதி இன்னும் இருக்குல்ல!" என்றான். எனக்கு உடனே பயம் வந்துவிட்டது. "ஏன்டா சண்டாளா! இத முதல்லையே சொல்றதுக்கு என்ன" என்றேன்.அதற்கு அவன், "நீங்க ரொம்ப ரசிச்சு சாப்டீங்க! அதான் நான் ஒண்ணும் சொல்லல" என்றான். அன்று இரவு எனக்கு லேசாக காய்ச்சல் அடிப்பது போல பிரமை வேறு. தூங்கி எழுந்ததும் மறுநாள் ஒன்றும் தெரியவில்லை. அதற்கு பிறகு இன்றுவரை கேக் மற்றும் இன்னபிற முட்டை கலந்த பதார்த்தங்களை தொடுவதில்லை.

Comments

Akila Alexander said…
nice jokuu
coolzkarthi said…
sorry mama...ippa ungalukkaga naan cake sappida aarambithu vittaen...

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)