எருமைச்சாணி வைத்தியம்

ஒரு ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார். அவர் ஒருவர் தான் அந்த சுற்றுவட்டாரத்திற்கே ஒரே வைத்தியர் என்பதால் எப்போதும் அவரைக் காண மக்கள் வந்த வண்ணம் இருப்பார் .அவருக்கு இதனால் நல்ல வருமானம்.விதி யாரை விட்டது. வைத்தியருக்கு அது ஒரு ஆப்பு வைத்தது. அது என்னவென்றால் வெளியூரில் இருந்து அந்த ஊருக்கு ஒரு புது வைத்தியன் வந்து சேர்ந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே கைராசிக்காரன்,கெட்டிக்காரன் ,எந்த வியாதியையும் குணப்படுத்துவான் என பெயர் வாங்கிவிட்டான் அந்த புது வைத்தியன்.
இதனால் ஊர் மக்கள் எல்லோரும் அவனிடமே சென்று வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார்கள் .நம்ம பழைய வைத்தியனுக்கு(இனிமேல் புது வைத்தியனை பு.வை என்றும் பழைய வைத்தியனை ப.வை என்றும் சுருக்கமாக சொல்கிறேன்) இதனால் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது. இப்படியே போனால் டேராவை தூக்கிக்கொண்டு வேற ஊர் தான் பார்க்கணும் அதனால் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று நம்ம ப.வை கிளம்பினார்.
கிளம்பியவர் நேரே பு.வை வீட்டிற்கு சென்றார்.பு.வியிடம் "எனக்கு ஒரு விசித்திர வியாதி உள்ளது. நீங்கள் தான் எப்படியாவது அதை குணப்படுத்த வேண்டும்" என்றார்.அப்படி என்ன வியாதி என்று பு.வை கேட்டார்.அதற்கு ப.வை ," எனக்கு சுவை உணர்ச்சி சுத்தமாக போய்விட்டது.என்ன சாப்பிட்டாலும் சுவையே தெரிவதில்லை" என்றார்.இதைக் கேட்ட பு.வைக்கு ஒரே குழப்பம். இது என்னடா இது நமக்கு வந்த சோதனை என்று அவருக்கு ஒரே யோசனை. அதே சமயம் அவருக்கு இந்த ப.வை ஏதோ விளையாடுகிறான் என்ற சந்தேகமும் வந்துவிட்டது.இருந்தாலும் அவர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனது சிஷ்யனை கூப்பிட்டார்.வந்தவனிடம் "அந்த நாற்பதாம் நம்பர் ஜாடியில் உள்ள மருந்தை கொண்டு வா" என்றார். அவனும் கொண்டு வந்தான்.அதை ப.வையிடம் கொடுத்து சாப்பிட சொன்னார். நம்ம ப.வை "ஹ்ம்ம்! பாவம் இவன்.நாம நடிக்கறோம்னு தெரியாம என்னவோ மருந்தெல்லாம் தர்றான்.நல்லா ஏமாற போறான்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அதை வாங்கி தின்றார்.தின்னவுடன் அதை தூ! தூ! என்று துப்பிவிட்டு "அடப்பாவிகளா! இது எருமைச்சாணி!" என்று கத்தினார்.உடனே நம்ம பு.வை சிரித்துவிட்டு , "அடடே! உங்கள் வியாதி குணம் அடைந்துவிட்டது. சந்தோசம்" என்றார். நம்ம ப.வை முகத்தை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
கதை இத்தோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.நம்ம ப.வையின் ஜாதகத்தில் புதன் பக்கத்து வீட்டையும், சனி எதிர்த்த வீட்டையும் , ராகு முக்கு வீட்டையும் பார்த்ததால் அவர் மனதில் அடுத்த திட்டம் உருவானது.அதன்படி திரும்பவும் பு.வை வீட்டிற்கு போனார். இவரைப் பார்த்த பு.வை " வாங்க! என்ன விஷயம்?" என்று கேட்டார்.நம்ம ப.வை உடனே "எனக்கு பழைய விஷயம் எல்லாம் சீக்கிரம் மறந்து போகிறது.சில சமயம் என் பெயர் கூட மறந்து விடுகிறது" என்றார்.இதைக்கேட்ட பு.வை மனதிற்குள் , "ஆஹா! சைத்தான் சர்க்கஸ் விளையாட ஆரம்பிச்சுரிச்சே" என்று எண்ணிக் கொண்டு தனது சிஷ்யனை அழைத்தார்.அவன் வந்தவுடன் சத்தமாக "தம்பி! அந்த நாற்பதாம் நம்பர் ஜாடிய எடு" என்றார். உடனே நம்ம ப.வை "மறுபடியும் எருமைச் சாணியா?" என்று கத்திவிட்டு எஸ்கேப் ஆனார்.

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)