ஓடுங்க!!! திங்கள் கிழமை வருது!!!
சனி, ஞாயிறு கிழமைகள் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. இந்த இரண்டு நாட்களுக்காக நாம் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.இருந்தும் ஒரு புண்ணியமும் இல்லை.வெள்ளிக்கிழமை பொழுது விடியும்போதே ஒரே குஜாலாக இருக்கும்.பொழுதுபோய் மாலை ஆனால் இன்னும் சந்தோசம். சினிமா போபவர்கள், நண்பர்களை பார்க்க போபவர்கள் , வெளியே சுற்றுபவர்கள் என்று ஒரே குஷி தான்.சனிக்கிழமையும் சந்தோசமாக போகும். ஞாயிறு வந்தவுடன் மறுநாள் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நினைப்பே கடுப்பைக் கிளப்பும். ஞாயிறு மாலை வந்தால் கடுப்பு இன்னும் கூடும். திங்கள் காலை கேட்கவே வேண்டாம். ஒரு லிட்டர் விளக்கெண்ணை குடித்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்ப வேண்டியது தான். பள்ளிப் பருவத்தில் தான் திங்கள் கிழமை வில்லனாக இருந்தது என்றால் இப்போதும் அப்படிதான் இருக்கிறது. என் மனைவியை சென்ற திங்கள் கிழமை அலுவலகம் அனுப்ப அவர்கள் அலுவலக பேருந்து வழக்கமாக நிற்கும் இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் ஒரு சிறுவர் கூட்டம். ஏதோ ஒரு பள்ளி பேருந்திற்காக அவர்கள் தத்தமது பெற்றோருடன் நின்றிருந்தனர். அதில் ஒரு சிறுமி அழு அழு என்று அழுது தீர்த்தாள். அவளுடைய அம்மா அருகில் இருந்தவரிடம் "திங்கள் கிழமை ஆனா இதே ரோதன தான்.சமாளிச்சு பள்ளிக்கூடம் அனுப்பறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடுது" என்று சலித்துக் கொண்டார். பேருந்து வந்தவுடன் அந்த சிறுமி வண்டியில் ஏற மாட்டேன் என்று ஒரே ஆர்ப்பாட்டம்.அவளுடைய அம்மா என்ன செய்வதென்று திகைக்க , அவளுடைய அப்பா அந்த சிறுமியை பேருந்தில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டார். அந்த சிறுமி வண்டிக்குள் இருந்து அபயக் குரல் எழுப்பி அழ ஆரம்பித்தாள். அதற்குள் வண்டி கிளம்பி போய்விட்டது. பார்த்துக்கொண்டிருந்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.என்னுடைய பள்ளிப் பருவத்து நாட்கள் மனதில் வந்து போயின.பிறகு நான் வீடு திரும்பிவிட்டேன். அன்று மதியம் என் மனைவி அலுவலகத்தில் இருந்து போன் செய்து "நீங்கள் என்னை பாராட்டவே இல்லை" என்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.என்ன சொல்கிறாய் என்று கேட்டேன்.அதற்கு அவள், "காலையில் அந்த பிள்ளை பள்ளி செல்ல என்னமா அழுதாள்.நான் ஆபீஸ் வர அப்படி அழவேயில்லை. எவ்வளவு சமர்த்தாக வந்தேன்" என்றாள். நான் விழுந்து,விழுந்து சிரித்தேன். எவ்வளவு வயதானாலும் திங்கள் கிழமை எல்லோர்க்கும் ஒரு வில்லனாக தான் இருக்கிறது. எனது அலுவலத்தில் ஒருவன் இருக்கிறான்.அவன் பெயரே "மண்டே மேனியா". திங்கள் கிழமை வந்தால் அவனுக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விடும்.ஐயா சிக் லீவ் எடுத்துவிடுவார்.இல்லை என்றால் அலுவலகத்திற்கு லேட்டாக வருவான். செம காமெடியாக இருக்கும். இப்படியாக வாழ்க்கை போகிறது.
Comments
எனக்கும் இந்த திங்கள் கிழமை என்றாலே அலர்ஜி...புதன் வந்த பிறகு தான் உற்சாகம் பிக்கப் ஆகும் ;-)
என்னை பொருத்த வரை என்றெல்லாம் மீட்டிங் இருக்கிறதோ அன்று எனக்கு மீட்டிங் மேநியா ஆரம்பிக்கும்.
அதை தவிர எப்போதெல்லாம் சுற்றுலா கூட்டி செல்ல ப்ளான் செய்வார்களோ, அப்போ ஒவ்டிங் மேநியா ஆரம்பிக்கும். இந்த விஷயத்தில் நானும் உங்களை போல் ஒருவன் தான் சிட்தா. ;)