அமெரிக்காவிற்கு பஸ்சில் போலாம்!
பிப்ரவரி முதல்வாரம் எனது சின்ன மச்சினன் அமெரிக்கா சென்றுவிட்டான் .அவன் சென்ற பிறகு எனது மாமியார் வீட்டில் நடந்த காமெடி கொஞ்ச ,நஞ்சம் இல்லை. எனது மாமியார் வீட்டின் மேல்மாடியில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. அந்த வீட்டு அம்மா , எனது மனைவியிடம் "அமெரிக்காவிற்கு பஸ்சில் போனால் எவ்வளவு நாளாகும் ?" என்று முகத்தை சீரியசாக வைத்து கொண்டு கேட்க , எனது மனைவியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அமரிக்காவிற்கு பஸ்சில் எல்லாம் போக முடியாது , விமானத்தில் தான் போக முடியும் என்று அவர்களுக்கு விளக்கி சொல்லியிருக்கிறாள் .
இதைவிட பெரிய கூத்து ஒன்று நடந்தது.எனது மாமியார் வீட்டின் அருகே ஒரு காய்கறி கடை இருக்கிறது.அந்த கடை முதலாளிக்கு பள்ளி செல்லும் இரண்டு சின்ன பையன்கள் இருக்கிறார்கள்.எனது மச்சினன் அமெரிக்கா சென்ற பிறகு அவர்கள் இருவரும் எனது மனைவியிடம் அடிக்கடி "நிலவில் இப்போது பகலா,இரவா? நிலவில் ரொம்ப குளிருமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.எனது மனைவியும் அவர்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் சொல்லி இருக்கிறாள்.ஆனாலும் அவர்கள் அடிக்கடி இந்த கேள்விகளை கேட்டு அவளை நச்சு பண்ணவும் , அவள் கடுப்பாகி "ஏன்டா, எப்ப பாரு நிலா பத்தி கேட்டு மொக்க போடறீங்க?" என்று சத்தம் போட்டிருக்கிறாள்.
அதற்கு அவர்களில் ஒருவன் சொல்லி இருக்கிறான் ,"அண்ணா(எனது மச்சினன்) இப்ப நிலவுக்கு தான போயிருக்காங்க.அதான் அத பத்தி கேட்கறோம் ".
எனது மனைவிக்கு அதை கேட்டு மயக்கம் வந்ததுதான் மிச்சம்.யாரோ(எனக்கு என்னவோ என் மாமியார் மேல்தான் சந்தேகம்) அந்த பயல்களிடம் நல்லா கதை விட்டுருக்கிறார்கள்.அதையும் அவன்கள் நம்பிவிட்டார்கள்.
இதையெல்லாம் கேட்டு நான் வாய்விட்டு சிரித்தேன்.
Comments