கிருஷ்ணா கிருஷ்ணா(மஹாபாரதம்)


          கிருஷ்ணன் இல்லாமல் பாண்டவர்கள் போரில் ஜெயித்திருக்க முடியாது என்பது மஹாபாரதம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.பாரதப்போரில் அர்ஜுனனின் சாரதியாக இருந்து அவனை பல அபாயங்களில் இருந்து கிருஷ்ணன் தான் காப்பாற்றுகிறான். அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் போர் உக்கிரமாக நடக்கிறது.அப்போது அர்ஜுனன் எய்யும் அம்பு பட்டு கர்ணனின் தேர் பல அடி தூரம் தள்ளி செல்கிறது.அப்போது கிருஷ்ணன் புன்னகைக்கிறான் . பதிலுக்கு கர்ணன் எய்யும் அம்புபட்டு அர்ஜுனன் தேர் சில அடி தூரம் பின்னால் செல்கிறது.அதற்கு கிருஷ்ணன் "ஆஹா! பிரமாதம்" என்று  பாராட்டுகிறான். நமது அர்ஜுனனுக்கோ எரிச்சல்.கிருஷ்ணனை பார்த்து "கிருஷ்ணா! என்ன கொடுமை இது! என் அம்பு வீச்சு கர்ணன் தேரை பல அடி பின்னால் தள்ளும்போது நீ வெறுமனே சிரிக்கிறாய்.அதுவே அவன் அம்பு நம் தேரை சில அடி தள்ளினால் அவனை பாராட்டுகிறாய்.ஏன்?" என்கிறான்.
           கிருஷ்ணன் புன்னகைத்து சொல்கிறான், "அர்ஜுனா!  உனது தேரின் கொடியில் பராக்கிரமசாலியான அனுமன் இருக்கிறான்.சாரதியாக நான் இருக்கிறேன்.அப்படி இருந்தும் கர்ணனின் அம்பு நம் தேரை பின்னால் தள்ளுகிறது என்றால் அவன் எப்பேர்ப்பட்ட  திறமைசாலி என்பதை புரிந்துகொள்.அதனால் தான் பாராட்டினேன்".
             இன்னொரு சுவாரசியமான சம்பவம் போரின் இறுதியில் நிகழ்கிறது.போர் முடிந்தவுடன் கிருஷ்ணன் அர்ஜுனனை தேரை விட்டு கீழே இறங்க சொல்கிறான்.ஆனால் அர்ஜுனனுக்கு அகங்காரம்."கிருஷ்ணா ! முதலில் சாரதி இறங்க வேண்டும்.பிறகு தான்  வீரன் இறங்குவான்.இது உனக்கு தெரியாதா? எனவே முதலில் நீ இறங்கு"
என்கிறான்.பொறுமை  இழந்த கிருஷ்ணன் "அர்ஜுனா! போதும் நிறுத்து.முதலில் தேரை விட்டு இறங்கு"  என்று கடுமையாக பேசுகிறான் . வேறு வழி இல்லாமல் அர்ஜுனன் அரைமனதாக தேரைவிட்டு இறங்குகிறான்.கிருஷ்ணன் "இறங்கினால் போதாது! பல அடி தூரம் பின்னால் செல் அர்ஜுனா" என்கிறான்.அர்ஜுனனும் அவ்வாறு செய்கிறான்.
       அதன் பிறகு கிருஷ்ணன் தேரில் இருந்து இறங்குகிறான்.அவன் தேரை விட்டு குதித்த அடுத்த வினாடி தேர் பெருத்த சத்தத்தோடு வெடித்து சிதறுகிறது.அர்ஜுனன் முகத்தில் அதிர்ச்சியோடு கிருஷ்ணனை பார்க்கிறான்.
    கிருஷ்ணன் சொல்கிறான்,' அடே அர்ஜுனா! தேரைவிட்டு முதலில் சாரதி தான் இறங்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவன் நான் அல்ல. ஆனால் இந்த யுத்தத்தில் கௌரவர்கள் உன்மீது கடுமையான அஸ்திரங்களை ஏவினார்கள்.நான் தேரில் இருந்த காரணத்தால் அவற்றால் உனக்கு அந்த பாதிப்பையும் செய்ய முடியவில்லை.நான் தேரைவிட்டு நீங்கினால் அவை உன்னை தாக்கும்.அதனால் தான் முதலில் உன்னை இறங்க சொன்னேன்". தன் தவறை  உணர்ந்த அர்ஜுனன் பகவான் கிருஷ்ணன் பாதம் பணிந்து நன்றி சொன்னான் .

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!