போதகரும்,காரோட்டியும்
போதகர் ஒருவர் இறந்து சொர்க்கம் சென்றார்.அங்கே சொர்க்கத்திற்குள் நுழையும் வாயிலின் அருகே நீண்ட வரிசை இருந்தது.அவரும் அந்த வரிசையில் நின்றார்.அந்த வரிசையில் அவருக்கு முன்னர் ஜீன்ஸ் பேண்டும்,குளிர் கண்ணாடியும் அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.சொர்க்கத்தின் காவலாளி அந்த இளைஞனிடம், " நீ யார் என்பதை என்னிடம் சொல்.அதைவைத்துதான் உன்னை உள்ளே அனுப்புவதா,இல்லையா என்று நான் முடிவு செய்ய வேண்டும்" என்றான். அதற்கு அந்த இளைஞன், "எனது பெயர் ஷாங். நான் பூமியில் வாடகைக்கார் ஓட்டியாக இருந்தேன்" என்றான்.உடனே தனது கையிலிருந்த பட்டியலில் அதை சரி பார்த்த காவலாளி அந்த இளைஞனிடம் " இந்த தங்க அங்கியை எடுத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இளைஞனும் மகிழ்ச்சியோடு உள்ளே செல்கிறான்.அடுத்து போதகரின் முறை.அவரிடம் அவரைப் பற்றி சொல்லுமாறு காவலாளி கேட்க அவரும் தனது பெயரையும், தான் பூமியில் வருடக்கணக்காக மக்களுக்கு கடவுள் பற்றிய விஷயங்களை போதித்து வந்ததாகவும் சொல்கிறார்.அதைக் கேட்டு தனது பட்டியலில் சரி பார்க்கும் காவலாளி அவரிடம், "இந்த பருத்தி அங்கியை எடுத்துக்கொண்டு தாங்கள் சொர்க்கத்திற்குள் செல்லலாம்" என்கிறான்.இதைக்கேட்ட போதகர் கடும் கோபம் அடைகிறார்."எனக்கு முன்னர் உள்ளே சென்றவன் ஒரு சாதாரண காரோட்டி.அவனுக்கு தங்க அங்கி, ஆண்டுக்கணக்காக மக்களுக்கு நல்லதை போதனை செய்த எனக்கு வெறும் பருத்தி அங்கியா?" என்று சத்தம் போடுகிறார். அதைக்கேட்ட காவலாளி புன்னகையுடன் சொல்கிறான், "ஐயா! தாங்கள் வருடக்கணக்காக கடவுளைப்பற்றி போதனை செய்தாலும் , மக்கள் உங்கள் போதனையைக் கேட்காமல் தூங்கி வழிந்தார்கள்.ஆனால், அந்த காரோட்டியின் காரில் பயணம் செய்த ஒவ்வொருவரும் தங்கள் உயிருக்காக கடவுளை எண்ணி பிரார்த்தனை செய்தார்கள்.என்வே, அவன் தான் உங்களைவிட மக்களை கடவுள் பால் திருப்புவதில் வெற்றி கண்டிருக்கிறான்.அதனால் தான் அவனுக்கு தங்க அங்கி தரப்பட்டது"
Comments
ம்ம் நல்ல கதைதான்..