அன்பும்,கருணையும்
இந்த காலத்தில் அன்பும்,கருணையும் நிறைந்த முகங்களை பொது இடங்களில் பார்ப்பது மிக அபூர்வம்.சமீபத்தில் நிலம் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகம் சென்றிருந்தேன்.அங்கு கூட்டமாக இருந்ததால் நாங்கள் வெளியில் இருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கருகில் மூன்று பெண்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.அதில் இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக தெரிந்தார்கள்.மூன்றாவது பெண்மணி மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது அவர் உடையிலேயே தெரிந்தது.மற்ற இரு பெண்களில் ஒருவர் அந்த மேல்தட்டு பெண்ணிடம் பேருந்தில் வரும்போது நேர்ந்த சிரமத்தை சொல்லிக் கொண்டிருந்தார். படிக்கட்டு மிகவும் உயரமாக இருப்பதாகவும், தன்னால் ஏறி இறங்க முடியவில்லை, மிகவும் கடினமாக இருந்தது என்றும் சொன்னார்.அந்த மேல்தட்டு பெண்மணி(அவருக்கு ஒரு நாற்பது வயது இருக்கும்) அந்த பெண் சொல்வதை அவ்வளவு அக்கறையாய் கேட்டார்.அவர் முகத்தில் அவ்வளவு கருணை இருந்தது."அடி ஏதாவது பட்டுவிட்டதா?, கால் மிகவும் வலிக்கிறதா?" என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.பிறகு நாங்கள் அலுவலகத்தின் உள்ளே சென்றுவிட்டோம். திரும்பி வருகையில் அந்த கருணைப் பெண் தனது காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டிச் சென்றார். இந்த சம்பவம் நிகழ்ந்து பல நாட்கள் ஆன பின்னும் அவர் முகத்தில் ததும்பிய அன்பும், கருணையும் இன்னும் என் கண்ணிலேயே உள்ளது.
Comments