கார்ன் பிளேக் சாப்பிடுவது லிவருக்கு நல்லது!!!
இது என்ன புது கதை என்கிறீர்களா? பிறகு, வேற என்ன செய்வது? "காலைல வெறும் கார்ன் ப்ளேக்சா சாப்டர?" என்று கேள்வி கேட்கும் நபர்களை இப்படிதான் சமாளிக்க வேண்டியுள்ளது.
சின்ன வயதில் டி.வி விளம்பரம் பார்த்து , ஆசைப்பட்டு சீரியல்(மெகா சீரியல் இல்லை, சாப்பிடும் சீரியல்) வாங்கி நன்றாக அமுக்குவேன்.அந்த வயதில் அது ஒரு சாகசம்."நான் இன்னைக்கு கார்ன் பிளேக்ஸ் சாப்டனே!" என்று பள்ளியில் படம் போட உதவும். ஆனால், இந்த காலம் போன காலத்தில்(ஹலோ! நான் ஒன்றும் "பெருசு" இல்லை.இருபத்தெட்டு வயது தான் ஆகறது) அதை காலை உணவாக உண்பது எனக்கு அவ்வளவு பிடித்தமாக இல்லை.இருந்தாலும் ஆண்டவன் கொடுத்த இந்த சின்ன வயிற்றை(யாருப்பா அங்க சிரிக்கறது? பிச்சுபுடுவன் பிச்சு, ராஸ்கல்) நிரப்ப வேண்டியுள்ளதே.
சமையல் செய்ய கற்றுக் கொள்ளாமல் போனோமே என்று என்னை நானே திட்டி கொண்டிருக்கிறேன். இதில் எனது மச்சினன் தொல்லை வேறு.காலையில் அமெரிக்காவில் இருந்து அழைத்து, "பாவா! நேத்து நான் சாதம் செஞ்சேன்.சூப்பரா வந்தது.நீங்க என்ன பண்றீங்க? சீரியலா?" என்று கடுப்பை கிளப்பினான். சரி! ஏதோ சின்ன பையன், ஆசையை பேசுகிறானே என்று "குட் ஜாப்! கீப் இட் அப்" என்று வாழ்த்தி(?)னேன்.
வீட்டில் தான் இந்த கொடுமை என்று அலுவலகம் சென்றால் அங்கேயும் ஒரே நகைச்சுவை. நான் எனது இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில் எனது நண்பர் சின்னா வேகமாக வந்தார். என்னை பார்த்து "சாப்டீங்களா?" என்று கேட்டார். நான் இல்லை என தலை அசைத்த உடன், "இருங்க , உங்களுக்கு ஒன்னு கொண்டுவர்றேன்" என்று போய்விட்டார். நானும் "ஆஹா! மனுஷன் ஏதோ நல்ல டிபன் கொண்டு வந்திருப்பாரு போல, ஒரு புடி புடிப்போம்" என்று ரொம்ப ஆவலாக காத்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து கையில் ஒரு டப்பாவோடு திரும்பி வந்தவர் "இந்தாங்க! கொஞ்சம் கப்புல போட்டுட்டு வாங்க.நாம சாப்பிடலாம்" என்றார்.
நான் டப்பாவை திறந்தால் . . . . . . . . . . . . . .டன் ட டொய்ங் என்று உள்ளே இருந்து என்னை பார்த்து சிரித்தது "கார்ன் பிளேக்ஸ்."
எங்கிருந்தோ "கெக்கே பிக்கே!கெக்கே பிக்கே" என்று சிரிப்பு சத்தம். யாருடா அது நம்மளை வெறுப்பேத்துவது என்று பார்த்தால் அது என் மனசாட்சி!!!
Comments