The Way Back - ஒரு பார்வை
சென்ற சனிக்கிழமை , "The Way Back" என்ற ஆங்கில படத்திற்கு நானும் , எனது அலுவலக நண்பர்களும் சென்றிருந்தோம்.வழக்கம் போல எனக்கு பிடித்த ஐநாக்ஸ் திரையரங்கு தான்.சிட்டி சென்டரில் உள்ள லேண்ட்மார்க் புத்தக கடைக்காகவே நான் எப்போதும் ஐநாக்சை தேர்வு செய்வேன்.படம் ஆரம்பிப்பதற்கு முன் சிறிது நேரம் லேண்ட்மார்க்கில் சுற்றலாம்.நிறைய தமிழ் , ஆங்கில புத்தகங்களை வாங்கலாம்.சரி விசயத்திற்கு வருவோம்.
நாங்கள் உள்ளே நுழையும்போது விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.எல்லாமே செம மொக்க விளம்பரங்கள். அவற்றை பார்த்தால், அந்த பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனும் மனம் மாறி விடுவான்.நல்ல வேலை இன்னும் சற்று முன்பாக வரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வழியாக படம் ஆரம்பித்தது.ஆரம்பித்து ஒரு 15 நிமிடத்தில் எனக்கு அருகில் இருந்து குறட்டை சத்தம்.திரும்பி பார்த்தால் , எனது நண்பர் சின்னா நன்கு தூங்கி கொண்டிருந்தார்.அவரை எழுப்பி படம் பார்க்க வைத்தேன்.இதனால் படம் செம மொக்கை என்று நினைத்து விடாதீர்கள்.நல்ல அருமையான படம்.
கதைச் சுருக்கம் இதுதான்:
1939 ஆம் வருடம் போலந்தை ஒரு புறம் ரஷ்யாவும், மறுபுறம் ஜெர்மனியும் ஆக்கிரமிக்கின்றன. இதில் ரஷ்ய இராணுவத்திடம் கைதியாய் சிக்குகிறார் போலந்தை சேர்ந்த ஒரு காவல் அதிகாரி.இதுபோல கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குற்றச்செயல் செய்தவர்கள் ஆகியோரை ரஷ்ய ராணுவம் சைபீரியாவில் உள்ள சிறையில் அடைக்கிறது .வரலாற்றில் என்னைப் போல புலிகளான(ஹி! ஹி!) உங்களுக்கு நிச்சயம் சைபீரியாவைப் பற்றி தெரிந்திருக்கும்.எப்பொழுதும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும் ஒரு குளிர் பிரதேசம் தான் சைபீரியா. அந்த நரகத்தில் இருந்து அந்த காவல் அதிகாரியும் ,அவருடன் இன்னும் ஐந்து பேரும் சேர்ந்து தப்பிக்கிறார்கள். அவர்களின் லட்சியம் மங்கோலியாவை சென்று அடைவது . அவர்களின் பயணத்தில் நிகழும் சம்பவங்கள் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளன .சைபீரியாவை தாண்டும் முன்பே ஒருவர் இறக்கிறார்.மீதம் உள்ளவர்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.வழியில் ஒரு பெண்ணும் அவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்.மிகுந்த சிரமப்பட்டு அவர்கள் மங்கோலியாவை அடையும் போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவென்றால் , மங்கோலியாவும் கம்யுனிச அரசாங்கத்தின் பிடியில் சிக்கிவிடுகிறது.இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி திபெத் வழியாக இந்தியாவை அடைவது.
இந்த பிரயாணத்தில் அவர்கள் மிகப் பெரிய பாலைவனத்தை கடக்க வேண்டியுள்ளது.பாலைவன பிரயாணம் முடியும் முன்பே , அந்த பெண்ணும் , இன்னும் இருவரும் இறக்கிறார்கள்.மீதம் உள்ள நால்வரும் , சிரமப்பட்டு லாசாவை(திபெத்) அடைகிறார்கள்.அங்குள்ள மக்கள் அவர்களை, வசந்த காலம் வந்த பிறகு இந்தியாவிற்கு கிளம்பச் சொல்கிறார்கள்.நால்வரில் ஒருவர் அமெரிக்கர்.அவர் தான் அருகிலுள்ள அமெரிக்க தூதரகத்தை அணுகி தனது நாட்டிற்கு போவதாக சொல்லி விடைபெறுகிறார்.மீதமுள்ள மூவரில் , இருவர் நன்கு ஓய்வெடுத்து விட்டு பிறகு இந்தியாவிற்கு செல்லலாம் என சொல்ல , காவல் அதிகாரி அதற்கு மறுக்கிறார்.மூவரும் மறுநாள் திபெத்தில் இருந்து கிளம்பி இந்தியா வந்து சேர்கிறார்கள்.சுபம்.
குளிர் பிரதேசம் மற்றும் வெப்பம் கொட்டும் பாலைவனம் ஆகியவற்றை மிக நேர்த்தியாக படம்பிடித்துள்ளார்கள்.இயற்கையின் அசுர பலமும், அதனுடன் போராடும் மனிதனின் மன வலிமையையும் படம் தெளிவாக காட்டுகிறது.கடும் குளிருடன் போரிட்டு வெல்லும் மனிதர்கள் , பாலைவனத்தில் வெயிலின் கொடுமையில் தண்ணீருக்கு தவிப்பது கண்ணீரை வரவழைக்கிறது.
முக்கியச் செய்தி: இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.சைபீரியாவில் இருந்து இந்தியா வரை மொத்தம் 4000 மைல் தூரத்தை உண்மையாகவே கடந்ததாக சொல்கிறார் இதைப் பற்றிய புத்தகத்தை எழுதிய Slawomir Rawicz . புத்தத்தின் பெயர் "The Long Walk ". அதைப் பற்றி சில சர்ச்சைகள் இருந்தாலும் நிறைவான படம் என்றே சொல்ல வேண்டும்.
Comments