ஆன்மிக சொற்பொழிவு!!!

கடும் பணிச் சுமையின் காரணமாக பதிவுகள் இடுவதில் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது.இன்று எப்படியாது ஒரு பதிவாவது இட வேண்டும் என்று எல்லாம் வல்ல வயலூர் முருகப் பெருமானை வேண்டி தொடங்குகிறேன்.இன்று வாரியார் சுவாமிகளின், வள்ளலார் பற்றிய சொற்பொழிவை கணினியில் கேட்டதன் விளைவு இது. வாரியார் சுவாமிகளுக்கு நிகர் அவர் தான். என்ன ஒரு சரளமான தமிழ், என்ன ஒரு ஞாபக சக்தி!!! "இன்று காலை என்ன சாப்பிட்டாய் ?" என்று யாராவது கேட்டால் நான் ஒரு ஐந்து நிமிடமாவது யோசிப்பேன். சுவாமிகள் எந்த காலத்திலோ படித்த, கேட்ட பாடல்களை சுருதி பிசகாமல், வார்த்தை மாறாமல் அழகாக பாடுகிறார். இடையிடையே மெல்லிய நகைச்சுவை வேறு. உபன்யாசம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி சொல்ல வந்ததை சுருக்கமாக, தெளிவாக, சுவையாக சொல்லும் கலை. இவை அனைத்தும் சுவாமிகளுக்கு உண்டு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எனது பள்ளி நாட்களில் புலவர் கீரன் அவர்களது சொற்பொழிவுகளை ஒலி நாடாவில் கேட்டிருக்கிறேன்.அவருடைய பேச்சும் மிக அருமையாக இருக்கும். அவருடைய பெரிய பலம் வெண்கல மணி போன்ற அவருடைய கணீர் குரல். மனிதர் பேசினாரென்றால் நாம் நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். எனது தந்தையார் , புலவர் கீரனுடைய வில்லி பாரத சொற்பொழிவு ஒலி நாடாக்களை வைத்திருந்தார். அதை நாங்கள் கேட்டு , பிறகு எனது பெரியப்பா கேட்டு , எனது உறவினர்கள் கேட்டு என ஒரு பெரிய கூட்டமே கேட்டு ரசித்தது. அவை எல்லாம் இன்று எங்கள் வீட்டில் தான் இருக்கிறதா இல்லை , எங்கள் உறவினர் வீட்டில் இருகிறதா என தெரியவில்லை.
இன்றைய காலத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் உபன்யாசம் சிறப்பாக இருக்கிறது.சமஸ்க்ருத சுலோகங்களை சொல்லி , அவற்றை பதம் பிரித்து , அவர் விளக்கம் சொல்லும் அழகே தனி. ராமாயணம் , மகாபாரதம் பற்றிய நமது அறிவு எவ்வளவு குறைவு என்பது அவர் சொற்பொழிவை கேட்ட பின்னர் உணர முடியும்.

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

இமயத்து ஆசான்கள்