இது அப்ரைசல் நேரம்!!!
அப்ரைசல் என்கிற சம்பள உயர்வு, பணியாளர்களை படாதபாடு படுத்துகிறது. வருடத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வளிக்கும் நிறுவனம் என்றால் தப்பித்தோம். சில நிறுவனங்களில் இரண்டுமுறை உயர்த்துவார்கள். அந்த நிறுவன பணியாளர் பாடு திண்டாட்டம்தான். ஏன் என்றால் இந்த அப்ரைசல் என்பது சாதாரண விஷயம் இல்லை. சென்ற வருடம் நீ என்ன சாதித்து கிழித்தாய் என்பதை நாசுக்கான வார்த்தைகளில் கேட்பார்கள்.நாம் அதற்கு பக்கம், பக்கமாக விளக்கம் அளிக்க வேண்டும். நாம் ஒன்றும் ஒருப்படியாக கிழிக்காவிட்டாலும் சும்மா அள்ளி விடவேண்டும் .அப்போதுதான் எட்டு சதவீதமோ, பத்து சதவீதமோ உயர்வு இருக்கும். இல்லையென்றால் "உனக்கு இப்போது கொடுப்பதே ஜாஸ்தி, கொய்யால! கொடுக்கறது வாங்கிட்டு கம்னு கெட" என்று சொல்லிவிடுவார்கள்("நாசுக்கான வார்த்தைகளில்"). எனவே சனி, ஞாயிறு கிழமைகளில் கூட ரூம் போட்டு யோசித்தாவது எதையாவது அந்த படிவத்தில்(எல்லாமே online தான்) நிரப்ப வேண்டும்.
இந்த வருடம் நானும் அதை சாதித்தேன், இதை சாதித்தேன் என்று நிரப்பியும் ஒன்றும் ஒருப்படியாக தேறவில்லை. இதில் கால கொடுமை என்னவென்றால் என் மனைவிக்கு அவள் அலுவலகத்தில் என்னைவிட அதிக சதவீத சம்பள உயர்வு தந்துவிட்டார்கள். அவளுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. "சனி, ஞாயிறு எல்லாம் ஆபீஸ் போய் ஏதோ நீ தான் உங்கள் ஆபீசை தூக்கி நிறுத்துவதுபோல் என்னமா சீன் போட்ட. இப்ப பாத்தியா எல்லாம் புஸ் ஆயிடுச்சு" என்று என்னை ஓட்டி தள்ளிவிட்டாள். நான் பதிலுக்கு " சம்பளமா முக்கியம், மனுஷனுக்கு மன நிறைவு தான் முக்கியம்" என்று சொல்லி சமாளித்தேன்.
அவளுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் , " சரளா அக்கா வேற பேப்பர் போட்டுட்டாங்க. போன மாசம் தான் அவங்களுக்கு நூறு ரூபா இன்கிரிமென்ட் எல்லாம் கொடுத்தேன். நோட்டீஸ் பீரியட் முடியறதுக்கு முன்னாடியே வேலைய விட்டு நின்னுட்டாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று புலம்பி தள்ளியிருக்கிறார். என் மனைவிக்கு ஒன்றும் புரியாமல்,"யாருங்க அது?" என்று கேட்க அவர் சொல்லியிருக்கிறார் " அவங்க எங்க வீட்ல துணி தொவைக்கிற அக்கா.சொல்லாம, கொள்ளாம நின்னுட்டாங்க" என்றிருக்கிறார். பிறகென்ன? சுற்றியிருந்த எல்லாரும் விழுந்து, விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
இந்த கதையை கேட்டு நானும் என்னுடைய புண்பட்ட மனதை சிரித்து ஆற்றினேன்.
Comments