பாண்டிக்குட்டி தொடர்ச்சி

பா.கு மனதில் மின்னல் போல ஒரு எண்ணம் பளிச்சிட்டது."பேசாம வீட்டை விட்டு ஓடி போயிருவோம் " என்று நினைத்தான்.உடனே தனது கால்சட்டை பையில் எவ்வளவு சில்லறை தேறும் என்று பார்த்தான். அலிபாபா குகை போன்ற அவனது பாக்கெட்டில் வறுத்த கடலை, இலந்தை வடை,சோடா மூடி ஆகிய வஸ்துக்களும் அவற்றின் நடுவே சில்லறையாக 20 ரூபாயும் தேறியது.உடனே, பதுங்கி பதுங்கி ஊர் சாவடி வந்தான்.அவன் வரவும் டவுன் பஸ் வரவும் சரியாக இருந்தது.அதில் தொற்றி கொண்டான்.பக்கத்தில் உள்ள பெரிய ஊரான மூக்கறுத்தான்பாளையத்தை அடைவது அய்யாவின் எண்ணம்.
              அந்த ஊரை அடைந்ததும் டீ கடையில் அஞ்சு சமோசா, ஒரு டீ அமுக்கினான்(அதற்குமேல் வயிற்றில் இடம் இருந்தது, பைசா தான் இல்லை).பிறகு என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.அவன் அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த சாமியார் போன்ற ஒரு பெரியவர் மயங்கி விழுந்தார்.பா.கு அவரை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப, முழித்தவர் "சுகர் சுகர்" என்றார். பா.கு உடனே டீக்கடையில் இருந்த சர்க்கரையை அள்ளி அவர் வாயில் போட்டான்.சிறிது நேரத்தில் அந்த மனிதர் தெளிவாகி எழுந்து உட்கார்ந்து பா.குவை பார்த்து "மிக்க நன்றி மகனே, நீ யார்?" என்று கேட்டார்.பா.கு உடனே உஷாராகி , தான் பார்த்த பழைய தமிழ் பட வசனங்களை நினைவுபடுத்தி , "சுவாமி! நானொரு துரதிஷ்டசாலி.போக்கிடம் இல்லை.வாழ்வை வெறுத்து வீட்டை விட்டு வந்துவிட்டேன்" என்றான். உடனே டீக்கடை அண்ணாச்சி "வூட்ட விட்டு ஓடி வந்தத என்ன பதமா சொல்லுது பார் சல்லி" என்று கமெண்ட் அடித்து பா.குவின் அனல் பறக்கும் பார்வையைக் கண்டு பயந்து திருவாய்மூடி அருளினார்.
               சாமியார் முகத்தில் ஒரு மின்னல் அடித்தது."மகனே, நான்தான் சுவாமி இமயகுமரியானந்தா. அதாவது இமயம் முதல் குமரி வரை அலைந்து திரிந்தவன்.இனிமேல் நீ தான் என் சீடன்" என்று சொன்னார்.இந்த செய்தி பா.குவின் வயிற்றில் பால், தேன்,பாகு, பருப்பு அவை நான்கையும் யாரோ கலந்து வார்த்தது போல் இருந்தது."ஆகட்டும் சுவாமி, நான் உங்கள் அடிமை" என்று அலாவுதீன் படத்தில் வரும் பூதம் போல் மண்டியிட்டான்.                                                     சுவாமியும்,சீடனும் நடந்து ஒரு பழைய வீட்டை அடைந்தனர்.அது தான் சுவாமியின் தங்குமிடம் என்று அறிந்த பா.கு வீட்டில் சென்று அதன் அமைப்பு, சமையல் அறை உள்ளதா இல்லையா போன்றவற்றை பார்த்து வைத்து கொண்டான்.சிறிது நேரம் சென்று சுவாமி இ.கு(இமயகுமரியானந்தா) எத சொன்னாலும் நம்புகிற நம்ம பேக்கு பா.குவை அழைத்து, "மகனே, நீ இங்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயம். நீ வீட்டை துறந்து வந்ததால் உன் வீட்டார் உன்னை வலைவீசி தேடுவார்கள்.அதனால் நீ குறிப்பிட்ட காலம் மாறுவேடம் பூணுவது ஷேமம்" என்றார்.பா.குவும் "ஆகட்டும் சுவாமி" என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.
                ஒரு மணி நேரம் கழித்து அவன் திரும்பி வந்தபோது தலையை மொட்டை அடித்திருந்தான்."இது போதுமா சுவாமி?" என்று இ.குவின் கருத்தை கேட்டான்.என்னதான் அவன் மொட்டை அடித்திருந்தாலும் அந்த பிளைமவுத் மூக்கும், சொப்பு வாயும் அவனை காட்டி கொடுத்துவிடும் என்பதை உடனே தனது ஞான திருஷ்டியில் உணர்ந்த இ.கு, "மகனே, இது போதாது.நீ கொஞ்ச காலம் முகத்திற்கு மாஸ்க் அணிந்துகொள் . இது கொரோனா சீசன் என்பதால் யாரும் உன்னை கண்டுகொள்ள மாட்டார்கள்" என்றார்.

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

இமயத்து ஆசான்கள்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!