பாண்டிக்குட்டி

        பாண்டிக்குட்டியை உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ? பரவாயில்லை, அதற்காக நீங்கள் வருத்தப்படுகின்ற அளவு அவன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை.எனக்கு அவனை நன்றாக தெரியும்.அவனின் சாகசங்கள் பல உள்ளன.அவற்றில் ஒன்றை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
       முதலில் பெயர்க்காரணம். அவனது உண்மையான பெயர் பாண்டி.வருடங்கள் ஓடினாலும் அவன் பார்க்க ஆள் சிறியதாக இருந்ததால் அந்த குட்டி அவன் பெயரில் சேர்ந்து கொண்டது . அது மட்டும் இல்லாமல் அவனை அவன் தாய் பாண்டியம்மாள் செல்லமாய் "குட்டி, குட்டி" என்று அழைத்ததும் ஒரு காரணம்.நீங்கள் புத்திசாலியாய் இருந்தால் இந்நேரம் அவன் தந்தை பெயர் பாண்டியப்பன் என்பதை எளிதாக கண்டுபிடித்திருப்பீர்கள்.ஊரில் அவர்கள் குடும்பத்தை பாண்டி அன்ட் கோ என்று தான் அழைப்பார்கள்.
          பாண்டிக்குட்டி படிப்பில் படு கெட்டி. எந்த அளவிற்கென்றால் 5 ஆம் வகுப்பை 5 வது தடவையாக படிக்கிறான் . இதோ இன்று அவனுடைய முழு ஆண்டுத்தேர்வின் கடைசி பரீட்சையான சமூக அறிவியல்.அதில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐயா அளித்த பதில்களும் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில் பதிக்கப்பெற வேண்டியவை . உங்கள் பார்வைக்கு மூன்று  கேள்விகள், அவனின் பதில்கள்.
 
   1) முதலாம் உலகப்போர் எப்போது நடந்தது?
        இரண்டாம் உலகப் போருக்கு முன்பு.

   2) ஷாஜஹான் என்ன கட்டினார்?
       அவர் மும்தாஜை கட்டினார்.

   3)  குதுப்மினார் எங்குள்ளது?
        அதை எங்கே வைத்து கட்டினார்களோ அங்கே உள்ளது.

இதற்கு மேல் சாம்பிள் கொடுத்தால் படிக்கும் உங்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் வரும் அபாயம் இருப்பதால் இத்தோடு நிறுத்தி கொள்வோம்.இப்படி அற்புதமாய் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடித்த களைப்பு தீர பா.கு(பாண்டிகுட்டியின் சுருக்கம்) அந்த விடுமுறையில் நன்கு தூங்கினான். கில்லி , கோலி, பம்பரம் போன்ற தேசிய விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றான். பரீட்சை முடிவு வர காத்திருந்தான்.
        தேர்வுமுடிவு தினத்தில் காலையில் எழுந்து, குளித்து(வாரம் ஒருமுறை தவறாமல் செய்வான்) கிளம்பினான் பா.கு. பாண்டியம்மாள் போருக்கு செல்லும் வீர புதல்வனை வழியனுப்பும் வீரத்தாய் போல அவனுக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் வீர திலகமிட்டு வழிஅனுப்பினாள்.பள்ளி சென்று முடிவை பார்த்தால் பா.குவிற்கு குப்பென வியர்த்தது, வயிற்றை பிரட்டியது.

          பிறகென்ன, அய்யா பரீட்சை எழுதிய லட்சணந்தான் நமக்கே தெரியுமே? இந்த முறையும் பெயில் தான். பா.குவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.அவனுடைய அம்மாவை அவன் சமாளித்துவிடுவான். அப்பனை நினைத்துதான் பயம்.பாண்டியப்பனின் கனவு, லட்சியம் எல்லாம் அவனுடைய மகன் அவனை விட ஒரு வகுப்பாவது  அதிகம் படித்துவிட வேண்டும் என்பது தான். பா.குவின் கிட்னிக்கு(அதாங்க மூளை)  அது எல்லாம் சாத்தியமே இல்லை என்று நினைத்தால்  நீங்கள் அவசரப்படுகிறீர்கள் என்று அர்த்தம். பாண்டியப்பன் படித்தது 6 ஆம் வகுப்பு வரைதான். அதற்கு மேல் எவ்வளவோ முயன்றும் அவன் மண்டையில்  படிப்பு ஏறவில்லை.ஆக, அவன் எதிர்பார்ப்பது பா.கு குறைந்தது 7 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைய வேண்டும் என்பதே. இதெல்லாம் நம்ம பா.குவின் மனதில் ஓடியது.
             வீட்டுக்கு போனால் தர்ம அடி  கிடைக்கும்.அதாவது பரவாயில்லை தாங்கலாம்.ஆனால் , கொலைப்பட்டினி போடுவார்கள்.அதுதான் கஷ்டம். பா.கு பல்  விளக்காமல் பத்து வருடம் கூட இருப்பான் ஆனால் பண்டம் தின்னாமல் பத்து நிமிஷம் கூட இருக்க மாட்டான்.என்ன செய்வது என்று யோசித்தான். நீங்களும் யோசியுங்கள், முடிந்தால் அவனுக்கு யோசனை சொல்லி நம்ம பா.கு, பலி ஆகாமல்  இருக்க உதவுங்கள்.
                                                                               தொடரும்  .................................................
     

Comments

Popular posts from this blog

அமிர்த வெண்ணெய்

இமயத்து ஆசான்கள்

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!